Event Details

நாள் : ஏப்ரல் 02, 2022 முதல் ஏப்ரல் 09, 2022 வரை

இடம் : தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் திருப்பத்தூர் மாவட்ட கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு மன்றமும் இணைந்து இலக்கியத் திருவிழாவை எட்டு நாட்கள் நடத்தின.

தமிழ்நாட்டின் முதன்மை எழுத்தாளர்கள், கலைஞர்கள்¸ ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் ஏறத்தாழ 46 பேர் இந்த இலக்கியத் திருவிழாவில் கருத்துரையாளர்களாகக் கலந்துகொண்டனர்.

‘இயல்’ விருதாளரும் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமாகிய திருமிகு.ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியையும் இலக்கியத் திருவிழாவையும் தொடங்கி வைத்துப் பேசினார். ‘’திருப்பத்தூர் வட்டாரப் படைப்பாளிகள் எவ்வாறு இலக்கியங்களில் தங்கள் பகுதியினரின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும், எழுத்தில் பதிவு பெறாத நிலம் இல்லாத நிலமே என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர் குஷ்வாஹா,ஐ.ஏ.எஸ்., அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

‘தமிழ் இலக்கியம் : இன்றும் நாளையும்’, ‘இலக்கியத்தில் பெண் மேம்பாடு’, ‘பெண் எழுத்தாளர்கள்’, ‘ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்’, ‘சிறார் இலக்கியம்’, ‘அறிவியல் அடிப்படையிலான இலக்கியங்கள்’, ‘இலக்கியமும் மனித விழுமியங்களும்’, ‘இலக்கியமும் மனித உரிமைகளும்’, ‘திரைப்படமும் இலக்கியமும்’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள் கருத்துரை வழங்கினார்கள்; பார்வையாளர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்.

பார்வையாளர்களின் சிறந்த வினாக்களுக்கு மேடையிலேயே நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் சல்மா, மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ, கவிஞர் இளம்பிறை, கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் ச.விஜயலட்சுமி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி, இயக்குநர் சந்திரா தங்கராஜ், இயக்குநர் ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ்., பாடலாசிரியர் அறிவுமதி, திரு.ஆர்.ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், கவிமாமணி தி.மு.அப்துல்காதர், வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா, எழுத்தாளர் மு.முருகேஷ், இயக்குநர் ராசி.அழகப்பன், எழுத்தாளர் ச.பாலமுருகன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திருநங்கை.கல்கி சுப்பிரமணியன், பேராசிரியர் அ.ராமசாமி, பேராசிரியர் மு.ராமசாமி, பேராசிரியர் சீ.பக்தவத்சல பாரதி, ஆய்வாளர் சுகவன முருகன் முதலானோர் கருத்துரையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இலக்கியத்திருவிழாவோடு இணைந்து புத்தக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. 54 அரங்குகளில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக வருகை தந்து நூல்களை வாங்கிச் சென்றனர்.

தூய நெஞ்சக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் இலக்கியத் திருவிழா மற்றும் புத்தக் கண்காட்சிக்கு சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர் குஷ்வாஹா அவர்கள், துணை ஆட்சியர் வில்சன் அமல்ராஜ் அவர்கள், தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா.மரிய அந்தோணிராஜ் அடிகளார் அவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா, பதிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் இலக்கியத் திருவிழா புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.