Event Details

நான் முதல்வன் உலகை வெல்லும் இளைய தமிழகம் – பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் 01.03.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரில் (தன்னாட்சி) மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டது. காலை 9.00 மணிக்கு இளங்கலை (UG) மாணவர்கள் காமராசர் அரங்கில் கூடினர். இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் ச.ச., தலைமை ஏற்று நிகழ்ச்சியை நடத்தினார்.

                சென்னையில் இருந்து நேரலையாகக் காணொலி வாயிலாக 10.00 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் வரவேற்புரை மற்றும் திட்ட விளக்கவுரை ஆற்றிய முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப, தலைமைச் செயலர் அவர்களின் உரையை மாணவர்கள் கேட்டு மகிழ்ந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் என்பதைக் கூறி இத்திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் எதிர்காலப் பயன் உள்ளிட்டவற்றை விளக்கமாக கூறியதைக் கேட்டு, மாணவர்கள் இத்திட்டத்தின் பயனை உணர்ந்து மகிழ்ந்தனர். முதலமைச்சரைத் தொடர்ந்து இளைய சமூகத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையத்தைச் சேர்ந்த திரு. ஆலிவர் பால்ஹெட்செட், காவல்துறைத் தலைமை இயக்குநர் முனைவர் சி. சைலேந்திர பாபு, இ.ஆ.ப., சர்வதேச செஸ்கிராண்ட் மாஸ்டர் திரு விசுவநாதன் ஆனந்த், இந்தியத் தொழில் நுட்பக் கழக இயக்குநர் திரு. காமகோடி வீழிநாதன், அறிவியலாளர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு. சத்யகாம் ஆர்யா, இந்தியக் கிரிக்கெட் வீரர் திரு. நடராஜன் தங்கராசு, செயல் இயக்குநர் திருமதி Dr. சந்தியா சிந்தலா, கிஸ்ஃப்ளோ நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு. சுரேஷ் சம்பந்தம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிபுணர் திரு. நெடுஞ்செழியன் ஆகியோரின் உரைகளைக் கேட்டு மாணவர்கள் ஊக்கம் கொண்டனர். சிறந்த அரசு அலுவலர், சிறந்த அறிவியலாளர், சிறந்த வணிகர், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வண்ணம் பேசிய சிறப்பு விருந்தினர்களின் உரைகளைக் காணொலி மூலம் மாணவர்கள் கேட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்வு நண்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது.

காணொலி உரைக்குப் பிறகு தூய நெஞ்சக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த 3 சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம் பெற்றிருந்தன. “இந்திய அரசியலமைப்பு சாசனம் சந்திக்கும் சவால்கள்” என்னும் தலைப்பில் தூய நெஞ்சக் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் தா. லெஸ்லின் அவர்கள், இந்திய அரசியலமைப்பு சாசனம் தற்போது எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து நண்பகல் 1.00 மணி முதல் 1.15 மணி வரை உரை நிகழ்த்தினார். இவ்வுரை மாணவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் அமைந்திருந்தது.

                1.15 மணி முதல் 1.30 மணி வரை “பெண் விடுதலை” என்னும் தலைப்பில் தமிழகத் திராவிடர் கழகத்தின் பொருளாளர் திருமதி. அகிலா எழிலரசன் உரை நிகழ்த்தினார் இச்சமூகத்தில் பெண்களுக்கு இழைப்படும் அநீதிகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் உரை அமைந்தது. மாணவிகளுக்கு இவ்வுரை சிறந்த புரிதலைத் தந்தது.

                01.30 மணி முதல் 1.45 மணி வரை “தலை நிமிரும் தமிழகம்” என்னும் பொருண்மையில் தமிழ்மொழி – தமிழினம் – தமிழகத்தின் தனிச் சிறப்புகளையும், பிற மாநிலங்களுக்குத் தமிழகம் எவ்வாறு முன் மாதிரியாக இருக்கிறது என்பதனையும் தூய நெஞ்சக் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி. பார்த்திபராஜா உரை நிகழ்த்தினார். இம்மூன்று சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்களையும் மாணவர்கள் உள்வாங்கிக் கொண்டனர்.

                இந்நிகழ்ச்சிக்குத் தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் ச.ச., தலைமை ஏற்று நடத்தினார். அருட்தந்தை முனைவர் பிரவீன் பீட்டர் ச.ச.,ஒருங்கிணைப்பு செய்தார். முனைவர் க. மோகன்காந்தி தொகுப்புரை வழங்கினார். நண்பகல் 1.45 மணி அளவில் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.